அலட்சிய போக்குடன் சுற்றும் மக்கள்; தமிழகத்தில் கொரோனா பரவும் அபாயம்

சென்னை: மத்திய, மாநில அரசுகள், பலமுறை அறிவுறுத்தியும், பலரும் வீட்டில் இல்லாமல் அலட்சியப் போக்குடன் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இவர்களால், தமிழகத்தில், 'கொரோனா' வைரஸ், சமூக தொற்றாக பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

கொரோனா பரவாமல் தடுக்க அவசர அவசரமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உலகளவில் பிப்., 26 ல் 81 ஆயிரத்து, 820 ஆக இருந்த கொரோனா தொற்று, மார்ச் 26 ல், 5.34 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நோயால் ஏற்பட்ட இறப்பு, இத்தாலியில், 8,000த்தையும், ஸ்பெயினில், 4,000த்தையும் தாண்டிவிட்டது. பொருளாதாரத்தில், மருத்துவத்தில் முன்னேறிய நாடுகள் கூட, திடீரென அதிகரித்த நோய் தொற்றால் தவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், இந்நோய் குறித்த அலட்சியப் போக்கே. பாதிப்பு அதிகரித்த பின், அவசர அவசரமாக ஊரடங்கு பிறப்பித்து வருகின்றன.